குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்றார்.
முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் அபிமானத்தை பெற்றவர். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வருமானவரித்துறை கருதினால் அவருக்கு முறையாக விண்ணப்பம் அளித்து அவரது வீட்டில் சோதனையிட அனுமதி கேட்டிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயக நடைமுறை.
ஆனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை ஏதோ ஒரு குற்றவாளியை பிடித்து இழுத்து வருவதைப்போல, கையோடு இழுத்து வந்து சோதனையிடுவது நல்லதல்ல. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று கருதுகிறோம்.
பிகில், மெர்சல் போன்ற விஜய்யின் படங்களில் அரசியல் ரீதியான விமர்சனம் இருந்தது. படகோட்டி படத்தில் கருப்பு சட்டை, சிவப்பு வேஷ்டி அணிந்து எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் அதை அனுமதித்திருந்தது. ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் அதிமுக, பாஜக அரசுகள், விஜய்யின் திரைப்படங்களில் வருகிற ஒரு சில வசனங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக இருக்கிறது என்பதற்காக அவருக்கெதிராக ஒருவிதமான சூழ்ச்சி வலைகளை பின்னுகிறது. அவருடைய வசனங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதற்காக ஜோசப் விஜய் என்று ஹெச். ராஜா குறிப்பிட்டு சொல்கிறார். அப்படியென்றால் ஜோசப் விஜய், முகமது போன்றவர்கள் ஒரு கருத்தைச் சொல்லக்கூடாதா, முருகன் மட்டும்தான் கருத்து சொல்ல வேண்டுமா என கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், வருமான வரித்துறையை கைப்பாவையாக வைத்துக்கொண்டு புகழ்பெற்ற நடிகரை மிரட்டுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லையென்று நடிகர் ரஜினியை சொல்ல வைத்த பிறகு, அவர் மீதான வருமான வரி வழக்கை மத்திய அரசு முடித்துவைத்தது.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி இந்த தேசத்தில் எறும்பில் இருந்து யானை வரை தங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. நடிகர் ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்தை முழுவதும் தெரிந்துகொள்ளாமல் கருத்து கூறியிருக்கலாம் அல்லது பாஜகவின் அழுத்தத்தினால் கருத்து தெரிவித்திருக்கலாம்.
அத்வானியையே மரியாதை குறைவாக நடத்தியவர் மோடி. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு மோடி மரியாதை தராததால் ராகுலின் தரம் குறைந்துவிடாது. மேலும் காந்திக்கும் காங்கிரஸுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு. ஆனால் காந்திக்கும், ஆர்.எஸ்.எஸ்க்கும் உள்ள உறவு துப்பாக்கி தோட்டா உறவு என்றார்.
ஜனநாயகவாதிகள் தவறை திருத்திக்கொள்வார்கள், சர்வாதிகாரிகள் தங்களது தவறை திருத்திக்கொள்ள மாட்டார்கள். ஹிட்லர், முசோலினி, தைமூர், செங்கிஸ்கான் போன்ற சர்வாதிகாரிகள் எப்படி தங்களது தவறை திருத்திக் கொள்ள மாட்டார்களோ, மோடியும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் தங்களது தவறை திருத்திக்கொள்ள மாட்டார் என்றார்.