தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்! - father

தேனி: தாயுடன் சேர்ந்து தந்தையை கல்லால் அடித்து படுகொலை செய்த மகனை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

காவல்துறையினர் விசாரணை

By

Published : Jun 10, 2019, 8:59 AM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அந்தோணிராஜா (55). இவரது மனைவி ஜெலினாமேரி (47). மதுபோதைக்கு அடிமையான அந்தோணிராஜா இரவு மட்டுமல்லாது பகல் பொழுதிலும் குடித்துவிட்டு மனைவியுடன் தினமும் தகராறு செய்வதையும், மனைவியை அடித்து சித்ரவதை செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்தோணிராஜா வழக்கம் போல குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து சித்தரவதை செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த அவரது மகன் ராஜ்குமார் (22) எவ்வளவு தடுத்தும் அந்தோணிராஜா மீண்டும், மீண்டும் தனது மனைவியை அடித்து உதைத்துள்ளார். தனது கண்ணெதிரே தனது தாயை அடித்து கொடுமைப்படுத்துவதை பார்த்து சகிக்க முடியாத ராஜ்குமார் பக்கத்தில் இருந்த பெரிய கல்லை எடுத்து தன் தந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் நிலை தடுமாறி அந்தோணி ராஜா கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு தாயும், மகனும் சேர்ந்து அந்தோணி ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பம் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்தோணிராஜாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த ஜெலினா மேரியை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் விசாரணை

இதற்கிடையே காவல் துறையினர் வருவதை அறிந்த ராஜ்குமார் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து தேவாரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தப்பியோடிய ராஜ்குமாரை தேடிவருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details