தலைமை காவலர் விபத்தில் தீயில் கருகி உயிரிழப்பு தேனி:கம்பத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சின்னமனூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். நேற்றைய தினம் (ஜூலை 31) இரவு பணி முடிந்து சொந்த ஊர் ஆன கம்பத்திற்கு சென்று கொண்டிருந்த போது சின்னமனூர் உத்தமபாளையம் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கம்பத்திலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தும் மற்றும் ராமகிருஷ்ணனின் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் தீ பற்றி எரிந்து ஆம்னி பேருந்து மற்றும் காவலர் ராமகிருஷ்ணனின் வாகனம் தீ பற்றி எரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன் பலியானார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சின்னமனூர் காவல்துறையினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) சொந்த ஊரான கம்பத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க:நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீது அரசின் நிலைப்பாடு என்ன? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
கம்பத்திற்கு கொண்டு வரப்பட்ட உடல் அவரது இல்லத்திற்கு முன்பாக வைக்கப்பட்டு உறவினர்களும் காவல்துறையினரும் காவலருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதனைத் தொடர்ந்து கம்பம் காமய கவுண்டன்பட்டி சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரை அருகே உள்ள மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
அங்கு அவருக்கு காவல்துறையினர் சார்பாக 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கிரி மற்றும் உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுக்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்று உயிரிழந்த காவலர் ராமகிருஷ்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காவலர் ராமகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மரியாதை அளிக்கப்பட்ட பின்பு காவலரின் உடல் தகன மேடையில் வைக்கப்பட்டு அங்கு அவரது உடலுக்கு காவலரின் மகன் தீ மூட்டினார்.
இந்த நிகழ்வில் காவலர் ராமகிருஷ்ணனுடன் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர் ராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் தேனி மாவட்ட மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:Chennai Metro: சென்னை மெட்ரோவில் இவ்வளவு பயணிகள் பயணமா?