தேனி:உத்தமபாளையம் அருகே 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரம் கேரள லாட்டரி சீட்டுகளை விற்ற தேனி விசிக மாவட்ட துணை செயலாளரான ஆரோக்கியசாமி என்பவரை போலீசார் இன்று (ஜன.22) கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிலை மணி தலைமையில் ரோந்துப் பணி மேற்கொண்ட போலீசார் அனுமந்தன்பட்டி சர்ச் தெரு பகுதியில் சந்தேகப்படும் படியாக நடந்து சென்றவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடமிருந்த துணிப்பையை சோதனையிட்டனர். அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 ஆயிரம் கேரள லாட்டரிச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது.