தேனி:பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தெ.கள்ளிப்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் பழனிவேல் என்பவரது வீட்டிலும் பணம் மற்றும் வீட்டில் வைத்திருந்த முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளை வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் யார் என்பதை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எனவே தீவிர விசாரணை மற்றும் கொள்ளை நடந்த வீடுகளில் கிடைக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட தடயங்களை கொண்டு ஆய்வு செய்ததில் பெரியகுளம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அவர்களை தேடிய நிலையில், நேற்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) இரவு பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த மதுசூதனன் மற்றும் அவருடன் இருந்த 2 சிறுவர்கள் என மூவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், தாமரைக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளை அடித்த வள்ளி, தெய்வானை, முருகன் ஆகிய மூன்று சிலைகளை மீட்டனர்.