தேனி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்துடன் இடம் பெற்றிருந்த பேனரைக் காவல் துறையினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது சர்ச்சையானதால் இரவோடு இரவாகப் பிரதமர் மோடி படத்துடன் கூடிய பேனரை தயார் செய்து மீண்டும் கட்சி அலுவலகத்தில் காவல் துறையினர் வைத்துக் கொடுத்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி பிப்ரவரி 26ஆம் தேதி மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் புகைப்படங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இச்சூழலில் தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சியின் பதாகைகளைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி பெரியகுளம் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள தனியார் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வரும் பாஜக மாவட்ட மற்றும் நகர அலுவலகங்களில் பிரதமர் மோடி படத்துடன் இரண்டு பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் நேற்று (மார்ச்2) மாலை தேனி நகர் காவல்துறையினர், பிரதமர் மோடி படத்துடன் இடம் பெற்றிருந்த பெயர்ப் பலகைகளைக் கிழித்து எறிந்துவிட்டுச் சென்றனர்.
இதற்கு பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. தலைவர்களின் படம் இடம் பெற்றிருக்கும் பதாகைகளை மறைப்பதற்கு மட்டும் அனுமதி உள்ள நிலையில், பாரத பிரதமரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட தேனி கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜகவினர் அறிவித்தனர். அதே வேளையில் பாஜக அலுவலகம் அமைந்திருக்கும் அதே கட்டடத்தில் செயல்படும் தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் விஜயகாந்தின் படம் மறைக்கப்பட்டுள்ளது.
இதனால் கலக்கமடைந்த தேனி காவல் துறையினர் இரவோடு இரவாக, பாஜக கட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய புதிய பெயர்ப் பலகைகளைத் தயார் செய்து வைத்துவிட்டு, கட்சியினரிடம் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனச் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு உள்ள நிலையில் பேனர் வைத்த குற்றத்திற்காக பாஜக நகரச் செயலாளர் மீது வழக்குப்பதிவும் காவலர்கள் செய்துள்ளனர்.