தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(26), அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஒரு சிறிய தகர வீட்டில் தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். பிறக்கும் போதே இடது கை இல்லாமல் பிறந்த இவருக்கு கால்பந்து மீது எண்ணற்ற ஈர்ப்பு கொண்டவர். தந்தை பெரியசாமி குடும்பத்தை விட்டு சென்ற காரணத்தினால் இவரது தயார் ராணிதான் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு பாலமுருகனையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
இவர், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் தனது கால்பந்து பயணத்தை தொடங்கியுள்ளார். உடலில் ஒரு கை இல்லாத குறையை மறந்து கால்பந்து விளையாட்டில் தீவிரம் காட்டி, கால்களால் பந்தை உதைத்து விளையாடியதால், விண்ணை நோக்கி சென்றது பந்து மட்டுமல்ல, இவரது வெற்றியும் திறமையும்தான். ஆம் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தித் தொடங்கினார். அதன் மூலம் வெற்றியும் அடைந்தார். பின்னர் குடும்ப சூழல் காரணமாக ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து முடித்தவர் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பை தொலை நிலைக்கல்வி வாயிலாக கற்றார்.
படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருந்த இவர், தனக்குள் இருந்த திறமையை மற்றவர்களுக்கு கற்றத்தந்துள்ளார். இவரது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அனுமதியுடன், மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்தார். இதன் மூலம் கோட்டூரிலேயே ஒரு கால்பந்தாட்ட குழுவையே, அமைத்து வெற்றி பெறச் செய்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் நண்பர்கள் அளித்த உற்சாகத்தினால், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சேர்ந்து மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஏழு நபர்கள் பங்கேற்கும் மினி கால்பந்து போட்டியில் இவர் தேர்வாகியது மட்டுமல்லாமல் அணியை வழிநடத்தி இரண்டாம் பரிசை பெற்றுத்தந்தார். இதற்கு அடுத்தபடியாக நேபாளில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி வெள்ளிப்பதக்கமும் வென்றார். வரும் அக்டோபர் மாதம் ஜோர்டானில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி சார்பில் இவர் தேர்வாகியுள்ளார்.
இதன் மூலம் அணிக்கு வெற்றியை ஈட்டித்தருவதோடு மட்டுமல்லாமல், எதிர்வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றுத்தருவதே தனது லட்சியம் என்கிறார் பாலமுருகன். ஆனால், வருமானம் ஏதுமின்றி இருக்கும் பாலமுருகனுக்கு இதுவரை படிப்பு மற்றும் விளையாட்டிற்காக கடன் வாங்கி, செலவுகள் செய்து வந்த அவரது தாய் ராணி தற்போது வறுமை காரணமாக மகனை அடுத்த கட்டமாக தாய்நாட்டிற்காக விளையாட அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார்.
பயணத்திற்கான விமானச் செலவு உள்ளிட்டவைகளுக்கு போதுமான நிதி வசதி இல்லாததால் பரிதவித்து வருகிறார். இதனால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கிறார். எனவே அரசு தேவையான உதவியைச் செய்திட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றார்.சாதிப்பதற்கு உடல் ஊனம் ஒரு தடையல்ல, மனதில் உறுதி, தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் பாலமுருகன் போன்ற சாதனையாளருக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.