தேனி:பெரியகுளம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் தெரு நாய்கள் கும்பலாக செல்வதும், சாலையில் செல்பவர்களை விரட்டுவதும், சிறுவர்களை விரட்டுவதுமாக இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனால் பெரியகுளம் பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்துள்ளனர். இதனை அடுத்து தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதாகக் கூறி, அதனை வேறு பகுதிக்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, பெரியகுளம் நகர் பகுதியில் சுற்றி திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெரியகுளம் நகர்மன்ற தலைவரான சுமிதாவின் 4வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பிரேம் சுதாகர். இவர் செல்லமாக நாய் ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அப்போது பிரேம் சுதாகரின் நாய், அவரது வீட்டின் அருகில் இருந்துள்ளது. தெருவோரம் அந்த நாயைக் கண்ட நகராட்சி ஊழியர்கள், அந்த நாயினை தெருநாய் என எண்ணி பிடித்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த பிரேம் சுதாகர், இது குறித்து பெரியகுளம் நகர்மன்ற தலைவரின் கணவரான சிவக்குமாருக்கு தகவல் கூறவே, அதற்கு சிவக்குமார் நாய் பிடிக்கும் வாகனம் உசிலம்பட்டி பகுதிக்கு சென்று விட்டது என்றும் நாயை அப்பகுதியில் இறக்கி விட்டு விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாயை மீண்டும் பெரியகுளம் பகுதிக்கு கொண்டு வர 2 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூற, அதற்கு ஒரு வழியாக பிரேம் சுதாகர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லபட்டதாகக் கூறப்பட்ட நாய் பிடிக்கும் வாகனம் பெரியகுளம் மயானம் அருகில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் இருப்பதை கண்ட பிரேம் சுதாகர், நாய் பிடிக்கும் வாகனத்தில் இருந்த ஊழியர்களிடம் சென்று தனது நாயை கேட்டுள்ளார்.