தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் காந்தி (50). இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் நிலப் பிரச்னை இருந்து வந்து உள்ளது. இதனால் ஈஸ்வரன், இது தொடர்பாக தேனி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், போடி குப்பிநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த ராஜசேகர் என்ற சட்ட ராஜசேகர் (48) காந்தியிடம் அறிமுகமாகி, தான் ஒரு வழக்கறிஞர் என்றும், இந்த பிரச்னையை பேசி தீர்ப்பதாகவும், வழக்கையும் நடத்தி தருவதாகவும் கூறி காந்தியிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சார்பு நீதிமன்ற வழக்கில் ராஜசேகர் ஆஜராகாததால் வழக்கு ஈஸ்வரனுக்கு சாதமாக ஒரு தலைபட்சமாக தீர்ப்பாகி உள்ளது. பின்னர், இது குறித்து அறிந்த காந்தி சட்ட ராஜசேகரை அணுகி பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது ராஜசேகர் சாதி பெயரைச் சொல்லி திட்டியும், பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை நலமாக உள்ளது - மருத்துவமனை அறிக்கை
இதனையடுத்து, இது குறித்து பாதிக்கப்பட்ட காந்தி, போடி நகர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரினை பெற்றுக் கொண்டு விசாரணை செய்த போடி நகர் காவல் துறையினர், ராஜசேகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பண மோசடி வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் ராஜசேகர் தலைமறைவாக இருந்த நிலையில், போடி குற்ற தனிப்பிரிவு காவல் துறையினர், ராஜசேகரை நேற்று (ஆகஸ்ட் 12) கைது செய்து உள்ளனர். மேலும் அவர் வழக்கறிஞர் படிப்பு படித்துள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த ராஜசேகர் என்ற சட்ட ராஜசேகர், ஏற்கனவே பண மோசடி, கொலை மிரட்டல், போலி பத்திரிகையாளர் என பல்வேறு வழக்குகளில் சிக்கி பல முறை சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவம் - வீட்டின் மீது பெட்ரொல் குண்டு வீச்சு!