கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து, தற்போது 135.25அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர் இருப்பு 5,929 மி.கன அடியாக உள்ளது. விநாடிக்கு 5,474 கனஅடி நீர் வரத்துள்ள நிலையில் தமிழ்நாடு பகுதிகளுக்கு 2,010 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், கோகிலாபுரம், சின்னமனூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரியாறு அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் காவல் துறையினர் சார்பாக தண்டோரா மூலமும், பாடல்கள் பாடியும் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் யாரும் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ மற்றும் வேளாண் பணிகளுக்காகவோ ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
பெரியாறு அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை இதேபோன்று கம்பம் நகராட்சி சார்பில் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து வருகின்றனர். மேலும் ஆற்றில் தண்ணீர் கலங்கலாக வருவதால், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.