தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலில் விழுந்து கேட்கிறோம்ய.! வீட்டைவிட்டு வெளியே வராதீங்க.! விழுதுகள் இளைஞர்களின் விழிப்புணர்வு - கரோனா விழிப்புணர்வு செய்யும் விழுதுகள் மன்ற இளைஞர்கள்

தேனி: பெரியகுளம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரியும் முதியவர்களின் கால்களில் விழுந்து, கையெடுத்து கும்பிட்டு வீட்டிற்குச் செல்ல அறிவுறுத்தும் விழுதுகள் இளைஞர் மன்ற இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

vizhuthukal
vizhuthukal

By

Published : Mar 28, 2020, 7:49 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் முன்பு போல் இல்லாத இக்கட்டான சூழலை இந்தியா எதிர்கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு 900ஐ தாண்டியுள்ளது. இதனால் கரோனா தொற்று பரவலை தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதபோல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி தனித்திரு.! விலகி இரு.! வீட்டில் இரு.! என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.

காவல்துறையினரும், சமூக நல ஆர்வலர்களும் வெளியே திரியும் மக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும், நோய்த் தொற்று அபாயம் இல்லாத சிலர் வீதிகளிகளில் உலா வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரும் வாகனங்கள் பறிமுதல், வழக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் மக்களின் கூட்டம் குறைவதாக தெரியவில்லை.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் கரோனா அச்சமின்றி வீதிகளில் உலா வருபவர்களின் கால்களில் விழுந்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் விழுதுகள் இளைஞர் மன்றத்தினர். 12வயது முதல் 18வயது வரை உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினராக கொண்ட இந்த விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் தாமரைக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதியோடு கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பெரியவர்களின் காலில் விழும் விழுதுகள் மன்ற இளைஞர்கள்

பேரூராட்சியின் ஒலிபெருக்கி வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளிலும் விழிப்புணர்வு வாசகங்களை பதிவு செய்து அதன் மூலம் பரப்புரயில் ஈடுபட்டனர். காய்கறி, மளிகை, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களிடமும் கரோனா பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். கடைவீதியில் நின்றிருந்த பெரியவர்களுக்கு காரோனா பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை தங்களது பணி தொடரும் என இளைஞர் மன்றத்தினர் தெரிவித்தனர். கரோனா நோய்த் தொற்று குறித்து விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மேற்கொண்டு வரும் இந்த விழிப்புணர்வு பரப்புரை அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்று வெளியே வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதையும் படிங்க:சென்னையில் நகரும் ஏடிஎம் சேவையை அறிமுகப்படுத்திய இந்தியன் வங்கி!

ABOUT THE AUTHOR

...view details