தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக பெரியகுளம் நகராட்சியினர் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் முழு ஊரடங்கை பிறப்பித்தனர்.
அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறிகடைகள் மற்றும் மருத்துவமனை, மருந்தகங்கள் தவிர்த்து மற்ற அனைத்து வணிக கடைகள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை தடை செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஜூன் 24ஆம் தேதி முதல் தேனி மாவட்டத்தின் மற்ற ஐந்து நகராட்சிகளிலும் மதியம் இரண்டு மணி வரை மட்டும் கடைகள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. பின்னர் மாநிலத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என கூறப்பட்டது.
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சியில் உள்ள வணிக கடைகளை குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் தென்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள பூட்டிய கடைகள் முன்பாக கூடிய வணிகர்கள், நீண்ட நாள்களாக கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரையாவது கடைகள் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரியகுளம் நகராட்சி அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.