தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக 31ஆவது ஆண்டு சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் நேற்றுத் தொடங்கின. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகள் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறையில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சென்னை புனித ஜோசப் கல்லூரி, சென்னை வைஷ்ணவா கல்லூரி அணிகள் மோதின. இதில், சென்னை புனித ஜோசப் அணி 25க்கு 18, 25க்கு 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், சென்னை சத்திய பாமா கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. இதில், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி 25க்கு 17, 25க்கு 20 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் திருச்சி தமிழ்நாடு காவல்துறை மற்றும் பொள்ளாட்சி எஸ்.டி.சி பொறியியல் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டதில், திருச்சி தமிழ்நாடு காவல்துறை அணி 25 க்கு 17, 25 க்கு 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.