டெல்லி தப்ளிக் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் அதிகபட்சமாக போடியில் 14 நபர்களும், பெரியகுளத்தில் மூன்று பேரும், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என பரிசோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து நோய்த்தொற்று உள்ள அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
பெரியகுளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவந்தனர். கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் வசிக்கும் குடியிருப்பிலிருந்து 7 கி.மீ. தூரத்திற்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவந்த தற்காலிக காய்கறிச் சந்தையை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.