மலைகள் சூழ்ந்த மாவட்டமான தேனியில், மேகமலை அருகே அமைந்துள்ளது சின்னமனூர் நகர். இந்த நகருக்குள் மலைகளில் உள்ள குரங்குகள் உணவு தேடி வருவது வழக்கம். அவ்வாறு உணவு தேடிவந்த குரங்குக் கூட்டமொன்று நிரந்தரமாக அங்கேயே தங்கி மக்களை படாதபாடு படுத்திவருகிறது. சின்னமனூர் பேருந்து நிலையம் அருகே பழக்கடை வைத்திருப்பவர்கள் குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை தாங்கிக் கொள்ளாமல் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடைகளுக்கு அருகிலிருக்கும் தோட்டத்திலிருந்து அதிகாலையில் கிளம்பும் குரங்கு கூட்டம் நேராக தாங்கள் வைத்திருக்கும் பழக்கடைக்கு வந்துவிடுகின்றன. பின்னர் அங்குள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு மாலையில் மீண்டும் தோட்டங்களுக்குள் சென்று குரங்குகள் மறைந்து விடுகின்றன. இதனை தடுக்கவும் முடியவில்லை, கட்டுப்படுத்தவும் இயலவில்லை என அவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
வாழை, தென்னை விவசாயிகள், பழ வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பாதசாரிகள் என அனைவரும் குரங்குகளின் அட்டகாசங்களை சகித்துக்கொள்ள முடியாமல் திணறிவருகின்றனர். உணவுப் பொருட்கள் விற்பவர்களின் கதறல் ஒருபுறம் என்றால், ஜவுளிக் கடைக்குச் சென்று துணிகளை எடுத்துக்கொண்டு ஓடி விடுவது, சலூன் கடைகளுக்கும் சென்று சில நிமிடங்களில் அட்டகாசம் செய்து உயிர் பயத்தை காட்டுவது என குரங்குகளின் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் மற்றொரு தரப்பினர்.