தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை காயிதேமில்லத் நகரில் கடந்த ஆண்டு கஜா புயலின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் வாரி வாய்க்காலின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுத்துவந்தனர்.
கடந்த ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையினால், வாரி வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பமும் மண்ணரிப்பு ஏற்பட்டு கிழே விழும் நிலையில் உள்ளது. ஓராண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் குடியிருப்பு பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் இருப்பதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.