பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பபட்டுள்ள வைகையாறு 18ஆம் நூற்றாண்டில் பொய்த்துப்போனதால் அன்றைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் (தற்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்) வேளான் உற்பத்தி சீர்குலைந்தது. வேளான் தொழிலை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி பஞ்சத்தாலும், பசியாலும் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிட்டது.
அந்த நேரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நெல்லை மாவட்டம் சுந்தர மலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் உருவாகும் நீரோடு, பெருந்துறையாறு, சின்னஆறு, சிறுஆறு, சிறுதோணிஆறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு 300 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் பாய்ந்து, இறுதியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரபிக்கடலில் கலந்தது.
வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஆற்றுநீரை தென்தமிழ்நாடு நோக்கி திருப்பி கொண்டுவர நடைபெற்ற முயற்சிகள் அனைத்தும், நிதி பற்றாக்குறை, சரியான திட்டமிடலின்றி தோல்வி அடைந்த நிலையில், இந்த முயற்சியில் சற்றும் தளராது மன உறுதியுடன் பெரியாற்றில் அணைகட்டி தென்தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக்.
தென்தமிழ்நாடு மக்களால் தெய்வமாகப்போற்றப்படும் கர்னல் ஜான் பென்னிகுவிக் 1911ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி உயிரிழந்தார். எனவே அவரது 109வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.