தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைக் கிடங்கில் வசிப்பிடம்... அரசு சலுகைகள் மறுப்பு - துயரத்தில் வாழும் பளியர் பழங்குடி மக்கள் - குப்பை கிடங்கு

தேனி: குப்பைக் கிடங்கு அருகே நோயால் அவதிப்பட்டு வாழும் தேனி மாவட்டம் சிறைக்காடு பளியர் பழங்குடி மக்களுக்கு கரோனா கால நிவாரணத் தொகை எதுவும் வழங்காமல் பாகுபாடு காட்டிவரும் அரசு அலுவலர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது

குப்பை கிடங்கு அருகே வசிப்பிடம், போக்குவரத்து வசதி கிடையாது, அரசு சலுகைகள் மறுப்பு துயரத்தில் வாழும் பளியர் பழங்குடி மக்கள்
குப்பை கிடங்கு அருகே வசிப்பிடம், போக்குவரத்து வசதி கிடையாது, அரசு சலுகைகள் மறுப்பு துயரத்தில் வாழும் பளியர் பழங்குடி மக்கள்

By

Published : Nov 14, 2020, 3:29 AM IST

இதுகுறித்து சமம் குடிமக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே‌.ராஜன் கூறுகையில், ”மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்து வந்த பளியர் பழங்குடி மக்கள், அரசால் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டு 2011ஆம் ஆண்டிலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா அணைக்கரைப்பட்டி பஞ்சாய்த்துக்கு உட்பட்ட சிறைக்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

குப்பை கிடங்கு அருகே வசிப்பிடம், போக்குவரத்து வசதி கிடையாது, அரசு சலுகைகள் மறுப்பு துயரத்தில் வாழும் பளியர் பழங்குடி மக்கள்

அப்போது அவர்களுக்கு 28 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. வீடுகள் வழங்கப்பட்ட இடத்தின் அருகேதான், போடி நகராட்சியின் பெரிய குப்பைக் கிடங்கானது அமைந்துள்ளது. அந்தக் குப்பைக் கிடங்கை அகற்றி விடுவோம் என மாவட்ட நிர்வாகம் அப்போது உறுதியளித்தது. ஆனால் இதுவரை அந்தக் குப்பைக் கிடங்கு அகற்றப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக உணவுகளில் அதிகமான ஈக்கள் மொய்ப்பதாகவும், குப்பைக் கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் தங்க முடிவதில்லை எனவும் இதனால் நோய்வாய்ப்பட்டு பல பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டில் நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்த தாங்கள், தற்போது ஆரோக்கியத்தை இழந்து, நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதாகவும், தங்களுக்குச் சுகாதாரமான இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என்றும் அரசிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பளியர் பழங்குடி மக்கள்

இம்மக்களுக்கான நியாயவிலைக் கடை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை போடி புதூரில் செயல்பட்டு வந்துள்ளது. மக்களுக்கான போக்குவரத்து வசதி எதுவும் இல்லாததால் மக்களின் கோரிக்கைக்கு இணங்க வாகனம் மூலமாக, ரேஷன் பொருட்களைச் சிறைக்காட்டு கிராமத்தில் போடி கூட்டுறவு பண்டகசாலை மூலம் நேரடியாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா நிவாரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசு வழங்கிய 1,000 ரூபாய் நிவாரண நிதி சிறைக்காடு பழங்குடி மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும்போது பதிவேட்டில் கையெழுத்து மற்றும் கைரேகை வாங்கியுள்ளனர்‌. ஆனால் நிவாரணத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

பலமுறை மக்கள் கேட்டும் வழங்காமல் இப்போது கரோனா நிவாரணத் தொகை உங்களுக்கு வழங்கிவிட்டோம், நீங்கள் கையெழுத்து போட்டுள்ளீர்கள் என போடி வட்ட வழங்கல் அலுவலர் மக்களிடம் கூற நிவாரணம் மற்றும் நியாயம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

அதேபோன்று பழங்குடியினர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்ட 2,000 ரூபாய் நிதியும் சிறைக்காடு பழங்குடி மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இந்தத் தொகுதியானது துணை முதலமைசர் ஓ.பன்னீர் செல்வம் தொகுதி என்பதால் அவர் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு சிறைக்காடு பளியர் பழங்குடி மக்களுக்கு உடனடியாக கரோனா கால நிவாரண நிதியை வழங்க உத்தரவிட வேண்டும்‌.சுகாதரமான வாழ்விடத்தை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும்.

பழங்குடி மக்கள் என்ற காரணத்தினால் குப்பைக் கிடங்கு அகற்றப்படாமல் அதன் அருகே சுகாதரமற்ற இடத்தில் மக்கள் நோயுடன் வாழும் வகையில் மக்களைப் பாகுபாட்டுடன் நடத்திய குற்றத்திற்காகவும், கரோனா நிவாரண நிதி வழங்காமல் மக்களை ஏமாற்றி தங்கள் கடமையைச் சரியாக செய்யாத அலுவலர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details