தேனி:கம்பம் அடுத்த பாரதியார் நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்த மணிவாசகம் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகன் பரத்குமார்(18). வீரபாண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், இளங்கலை வணிகவியல் இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி பரத்குமார், கல்லூரி வகுப்பு முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் கம்பம் நோக்கி வந்துள்ளார்.
உத்தமபாளையத்தை கடந்து கோவிந்தன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, சாலையின் இடது புறத்தில் இருந்து வந்த கே.கே.பட்டியைச் சேர்ந்த ராம்குமார்(22) என்பவர் வந்த இருசக்கர வாகனமும், பரத்குமார் வந்த வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதில், பரத்குமார் படுகாயமடைந்தார்.
அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்த பரத்குமாரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், சிகிச்சை பலனின்றி இன்று (நவ.27) அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். பரத்குமார் இறப்பதற்கு முன்பாக, தான் இறந்து விட்டால் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி விடுமாறு கூறியதை அடுத்து, பரத்குமாரின் பெற்றோர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.