தேனி மாவட்டம் போடி நந்தவனத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை போடி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். பரிசோதனைக்கு தாமதம் ஆகும் என்பதால், மருத்துவமனையில் கார்த்திகாவை இறக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது போடி நகர் காவல் நிலையம் முன்பாகப் பணியிலிருந்த காவல் துறையினர், ஊரடங்கு உத்தரவை மீறி, ஆட்டோ ஓட்டியதற்காக வாகனத்தைப் பறிமுதல்செய்துள்ளனர். இதேபோல் போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபர்ணா என்ற கர்ப்பிணி, மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றபோது, சந்தைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போடி நகர காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையிலான காவல் துறையினர், அபர்ணாவை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதாகக் கூறி, ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டுள்ளனர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அபர்ணா அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்தே சென்றுள்ளார். மேலும், அவர் சென்ற ஆட்டோவையும் பறிமுதல்செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தேனி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.