தேனி: தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது கொட்டக்குடி ஊராட்சி. இதன் உட்கடை கிராமங்களாக முதுவார்க்குடி, முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட 9 மலை கிராமங்கள் உள்ளன. சுமார் 2,000க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வரும் அப்பகுதிகளுக்கு முறையான சாலை வசதிகள் கிடையாது.
போடியில் இருந்து குரங்கனி வரை மட்டும் பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. குரங்கனியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை உள்ள 12 கி.மீ தூரத்தில், முதல் 2 கி.மீ வரைக்கு மட்டும் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்துள்ள 10 கி.மீ தூர சாலை வனப்பகுதியில் இருப்பதால், சாலை அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், எலுமிச்சை, மா, அவகொடா உள்ளிட்ட விளை பொருட்கள், வேளாண் உபகரணங்கள் ஆகியவற்றை குதிரைகள் உதவியுடன் தான் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
அதேபோல மகப்பேறு உள்ளிட்ட அவசர கால சிகிச்சைக்கும் வாகன வசதிகள் இல்லாமல், டோலி கட்டி தூக்கி வரும் அவல நிலையே உள்ளது. எனவே தங்கள் பகுதிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று முதுவார்க்குடி பகுதி மக்களின் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போரட்டங்களையும் அப்பகுதியினர் நடத்தியுள்ளனர். சாலை வசதி செய்து தராததை கண்டித்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலையும் முதுவார்க்குடி பகுதி மக்கள் புறக்கணித்திருந்தனர்.
இந்நிலையில் சாலை வசதியில்லாத முதுவார்க்குடி பகுதிக்கு இன்று (ஜன.24) தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக குரங்கனியில் இருந்து செல்லும் கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில் ஜீப்பில் பயணம் செய்தார். பின்னர் முதுவார்க்குடி பகுதியில் உள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 30 பயணாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் வேளாண் உபகரணங்கள் உட்பட ரூ.61.49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் வழங்கினார்.