தேனி:இந்தியா முழுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவ வெண்கலச் சிலைக்கு காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் தென்கரைப் பகுதியில் இருந்து பேரணியாக மேளதாளத்துடன் நடந்தே வந்து வடகரைப் பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் இதன் தொடர்ச்சியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அவர், ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் கனவு நினைவாக வேண்டும் என்றால் அனைவரும் சமூக நீதியுடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டு வாழ வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உலகம் இருக்கும் வரை அம்பேத்கரின் கொள்கை கோட்பாடுகள், இருந்து வெற்றியடையும்” என்று கூறி விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் அவர்களை அண்ணன் என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.