மத்திய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் தேனி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (நவ.06) நடைபெற்று வருகிறது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், “ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஊராட்சிகளில் மட்டும் செயல்படுத்த முன்வந்துள்ளது. ஆனால், தேனி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊராட்சிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், தேனி மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதன் மூலம் தனி மனித குடிநீர் தேவை நிவர்த்தியடைவதோடு மட்டுமல்லாது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தண்ணீர் தேவையையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், அடுத்து வரும் 30 ஆண்டுகளில் உருவாகும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது.