மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது 58ஆம் கால்வாய் திட்டம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து 33 கி.மீ தொலைவு செல்லக்கூடிய இக்கால்வாய் பல்வேறு பிரச்னைகளால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் நீதிமன்ற ஆணையின்படி கடந்த 2018ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.32 கோடி மதிப்பில் 58ஆம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் இரு மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 67அடியை எட்டிய பிறகுதான் 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுவது நடைமுறை என்பதால் 2019 டிசம்பரில் தண்ணீர் திறக்கப்பட்டது, 2020இல் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததையடுத்து இன்று 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார் ஓபிஎஸ்! தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வைகை அணையின் வலது கரையில் உள்ள 58ஆம் கால்வாயின் நான்கு மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றார். அவரைத் தொடர்ந்து தேனி ஆட்சியர், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பாசன பகுதி விவசாயிகளும் நவதானியங்கள், மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இன்று முதல் விநாடிக்கு 150 கன அடி வீதம் அணையின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 67அடி வெளியேற்றினால் மட்டுமே 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்தது வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பால் உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை தாலுகாகளில் உள்ள 33 கண்மாய்கள் நிரப்பப்பட்டு 228.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதையும் படிங்க:அணையின் நடுவே ஏற்பட்ட விரிசல்: சரிசெய்து தர கோரிக்கை!