தேனி:'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பின்கீழ் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, கம்பம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் பேசிய அவர், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேனி மாவட்ட மக்கள் நீங்கள் மட்டும் திமுகவை ஏமாற்றி விட்டீர்கள்.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததால் தமிழ்நாடு மக்கள் மீது பிரதமர் மோடி கோபமாக உள்ளார். ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையை தராமல் நாடாளுமன்றம் கட்டி வருகிறார். இது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்.
திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்த பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை தற்போது அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக விவசாயக் கடனை ரத்து செய்தது, ஒரு ரூபாய்க்கு அரசி, இலவச கலர் டிவி உள்ளிட்டவைகள் வழங்கியது.
எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தாலும் அவர் தைரியசாலி. தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசை திமுக தலைவர் எதிர்த்த போது, ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்த்தார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசால் தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் மருத்துவ கனவில் 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விரைவில் திமுக ஆட்சி வந்ததும், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு விரட்டியடிக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
மோடிக்கு யார் அடிமை என்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இருவருக்கிடையே போட்டி நிலவுகிறது. அந்த அளவிற்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மோடிக்கு அடிமையாக உள்ளனர். உங்கள் மாவட்டத்தில் மோடிக்கு இரண்டாவது அடிமை உள்ளார். அவர் தான் ஓபிஎஸ்.
அன்புமணி ராமதாஸ் ஓ.பன்னீர்செல்வத்தை செல்லமாக டயர் நக்கி எனத் தான் அழைப்பார். உங்கள் ஊரில் ஒரு சாதாரண டீக்கடை வைத்திருந்தவர் இன்று பல்லாயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். பண மதிப்பிழப்பு காலத்தில் சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ஓபிஎஸ்க்கு லஞ்சம் கொடுத்திருந்ததை எழுதி வைத்திருந்த டைரி கைப்பற்றப்பட்டது.
மேலும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ள ஓபிஎஸ், அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக ஏழு கோடி பெற்றுள்ளார். அதற்காக அந்நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு தண்டனை வழங்கியுள்ளது. இவ்வாறு லஞ்சமாக பெற்ற பணத்தை வைத்து ஓபிஎஸ், அவரது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், அதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. ஜெயலலிதா, சசிகலா மற்றும் மக்களுக்கு என யாருக்கும் ஓபிஎஸ் விசுவாசமாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.
ஊழல் செய்து பணத்தை சேர்த்ததால் தான் சசிகலா சிறைக்கு சென்றார் என அமைச்சர் ஒருவர் கூறுகிறார். அந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளி தான். முதல் குற்றவாளி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. தற்போது இரண்டாவது குற்றவாளியான சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் அவருக்கு பயந்து கொண்டு, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதிகளை அடைத்து வைத்துள்ளனர். மேலும் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தையும் அடைத்து சீல் வைத்துள்ளனர்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்படும், ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்" என்றார்.
பின்னர், பிச்சம்பட்டி, மொட்டனூத்து, கண்டமனூர் மற்றும் கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். இதையடுத்து மாலையில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேப்பம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.