தேனி மாவட்டம், போடி அருகே உள்ள மேலப்பரவு மலைக்கிராமத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 169 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர், சாலை, மின் இணைப்பு உள்ளிட்ட அப்பகுதியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தரக்கோரி முன்னதாக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்பது அப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக்.31) மேலப்பரவு மலைக்கிராம மக்களை நேரில் சென்று சந்தித்தார்.
பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஓபிஎஸ் நேரிடையாக அப்போது அவர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை செப்பணிடும் பணிகளை பார்வையிட்டதுடன், அதனை விரைந்து முடிக்குமாறும் சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போடி புதூரை அடுத்துள்ள வலசத்துறை அருகேயுள்ள மரிமூர் கண்மாய் பகுதியையும் நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.
அப்போது கண்மாய்க்குச் செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அப்பகுதியினர் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரிடம் அலுவலர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்றுமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:’முகக்கவசம் அணியாத 500 பேர் வீட்டிற்கு கடிதம்’: நெல்லை காவல் துறையினர் புதுமையான நடவடிக்கை