தேனி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை
தேனி: கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட தேனி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஓ. பன்னீர்செல்வம் சில மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடுவது என்ற குழப்பம் அக்கட்சியினரிடையே நிலவிவருகிறது.
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் கூடிய அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் இடையே விவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவைப் புறக்கணித்த துணை முதலமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் தனியே ஆலோசனை நடத்திவந்தார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 2) சென்னையில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களுடன் பங்கேற்ற ஓபிஎஸ், இரவில் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வருகைதந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, வடக்கு அக்ரஹார தெருவில் உள்ள அவரது வீட்டில் தனது பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வருகைதந்துள்ளார்.
துணை முதலமைச்சரின் வருகையை அறிந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ஆண்டிபட்டி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன், தேனி மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் சில மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வீட்டு வாசலில் வந்து நின்ற ஓபிஎஸ் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து பின் மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டார். இதனையடுத்து அங்கிருந்த அதிமுகவினர் கலைந்துசென்றனர்.