செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தேனி:அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று (பிப்.23) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்பதால் ஈபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ், இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பக்கம் உள்ளனர் என சூளுரைத்திருந்தார்.
இதுகுறித்து பெரியகுளம் தென்கரையில் உள்ள இல்லத்திலிருந்து சென்னை கிளம்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஒன்றரை கோடி தொண்டர்கள் என்பக்கம் என ஈபிஎஸ் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, 'தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்' என பெரியகுளம் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, 'இதுகுறித்து உரிய நல்ல ஒரு அறிக்கை விரைவில் வெளிவரும்' என ஓபிஎஸ் தெரிவித்து விட்டு கார் மூலம் மதுரை கிளம்பினார். மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளார். நாளை (பிப்.24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்த உள்ளார்.
இதையும் படிங்க:'ஈரோடு தேர்தலில் வெற்றி உறுதி... ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான்' - ஈபிஎஸ் தடாலடி