முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டேன்: ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரவீந்திரநாத் கூறியதாவது, "மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆண்டிப்பட்டியில் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையினை போக்குவதற்காக இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஆண்டிப்பட்டி பகுதியில் தேசிய நிலத்தடி நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிலத்தடி நீர் எவ்வாறு உள்ளது, அதை மக்களின் தேவைக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை சாட்டிலைட் மூலம் ஆய்வு நடத்தப்படும்'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ''முல்லைப் பெரியாறு அணை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் உரிமையினை, எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டேன். மேலும் மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான ரயில் சேவை போக்குவரத்து திட்டத்தின் சோதனை ஓட்டம் முடிவு பெற்றது. பயணிகளின் சேவை மார்ச் மாதத்தில் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா: சென்னையில் எதிர்க்கட்சிகளின் சங்கமம்!