தேனி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) சங்கத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் ஒன்றியத் தலைவராக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
தேனியில் உள்ள என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், அதற்கான ஆணையை ஓ.ராஜாவிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். துணைத்தலைவராக செல்லமுத்து பதவியேற்றார். அவருடன் நிர்வாகக் குழு இயக்குநர்கள் பதவி ஏற்றனர்.
இதையும் படியுங்க:ஆவினின் புதிய ரக பாக்கெட் பால் அறிமுகம்...!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "ஓ.ராஜா பதவி ஏற்றதில் எந்த சர்ச்சையும் இல்லை. நீதிமன்றம் கூறிய விதிகளின்படி பதவியேற்றுள்ளார். கம்பத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தை தாக்க வந்தவர்களை எங்களுக்கு தடுக்கவும் தெரியும், அவர்களது கரங்களை முறிக்கவும் தெரியும். ஆனால் இரு சமுதாயத்தினருக்குமிடையே பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைதி காத்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பயங்கரவாத இயக்கங்கள், தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் கட்சி திமுக. அது மக்களிடையே மதவெறி அரசியலை தூண்டிவருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில், இஸ்லாமியர்கள் யாரும் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் திமுகதான்.
அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூலைச்சலவை செய்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாற்றி அவர்கள் வாக்குகளை பெறும் நோக்கில் இதனை திமுக செய்துவருகிறது" என குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி இதையும் படியுங்க:ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் தற்கொலை முயற்சி