கேரளா மாநிலம் மூணாறு அருகேயுள்ள கம்பிளி கண்டம் பகுதியைச் சேர்ந்த சரவணன் - சத்யபாமா தம்பதியினர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குடும்பத்தோடு பழனி கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்களின் பெண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்திய பின் ஜீப்பில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பின் இருக்கையில் இருந்த தாயின் மடியில் குழந்தை அமர்ந்திருந்தது.
இரவு பத்து மணியளவில் ஜீப்பானது ராஜமலை ஐந்தாம் மைல் எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தாயின் மடியிலிருந்த குழந்தை சாலையில் தவறி விழந்துள்ளது. இதனை தூங்கிக்கொண்டிருந்த தாய் சத்யபாமா கவனிக்காமல் இருந்ததால் அவர்கள் ஜீப்பை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதையடுத்து சாலையில் விழுந்த குழந்தை அங்கு தவழ்ந்து கொண்டிருந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் வனத்துறையினரின் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை ஊழியர் ஒருவர் சாலையில் விழுந்து தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டார்.
இதேவேளையில் குழந்தை விழுந்தது கூட தெரியாமல் வீடு வரை சென்ற தாய் சத்யபாமா, வீட்டை அடைந்ததும் தனது மடியில் இருந்த குழந்தை மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அந்த தம்பதியினர் குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது குழந்தை வனத்துறையிடம் பத்திரமாக இருப்பது தெரியவந்தது.
பின்னர் அந்த குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை விழுந்த பகுதி வனவிலங்குகள் நிறைந்த பகுதியாகும். இச்சம்பவத்தில் வனத்துறையினர் உரிய நேரத்தில் குழந்தையைப் பார்த்ததால் குழந்தை எந்தவொரு பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டது. குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தாய் அலட்சியமாக தூங்கியதால் ஏற்பட்ட இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.