தேனி:கம்பத்தில் உள்ள கம்பம் நகர்ப் பகுதிக்குள் கடந்த மாதம் 27 ஆம் தேதி அரி கொம்பன் என்ற காட்டு யானை திடீரென நகர்ப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொது மக்களை விரட்டி வாகனங்களைச் சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலை தெறிக்க ஓடிச் சென்றனர். அப்போது யானை துரத்திய போது கம்பம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் யானை தாக்கி படுகாயம் அடைந்தார்.
காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் பால்ராஜ் யானை தாக்கியதில் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜை வனத்துறை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.