முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி டிசம்பர் 15ம் தேதி போராட்டம் தேனி:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தந்தை பெரியார், பிடிஆர் மற்றும் பதினெட்டாம் கால்வாய் உள்ளிட்ட 3 கால்வாய்களுக்குத் தண்ணீர் திறக்கக் கோரி வரும் டிசம்பர் 15ஆம் தேதியன்று, ஓ.பி.எஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் சையதுகான் கூறியுள்ளார்.
போடிநாயக்கனூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற அலுவலகத்தில், அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர் சையதுகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தந்தை பெரியார், பிடிஆர் மற்றும் பதினெட்டாம் கால்வாய் ஆகிய 3 கால்வாய்களுக்கும் வழக்கமாக நவம்பரில் தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டில் தற்போது வரை தண்ணீர் திறக்கப்படாததால், தேனி மாவட்டத்தில் உள்ள சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் பாசன வசதி கேள்விக்குறியாக உள்ளது. இவற்றில் குறிப்பாக, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த போடிநாயக்கனூர் தொகுதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி என்பதால், வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக அரசு தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கருதுகிறோம். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். அதனைக் கண்டித்துத் தான், வரும் டிசம்பர் 15ஆம் தேதியன்று உத்தமபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவினரும் பங்கேற்க உள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 14ஆம் தேதியன்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. இதற்குப் போட்டியாக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. விவசாயிகள் நலனுக்காக மட்டுமே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று கூறினார்.
வருகிற 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், தற்போது ஓ.பி.எஸ் தரப்பு உத்தமபாளையத்தில் வரும் 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்டோக்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம் - தொடங்கி வைத்த அமைச்சர்..!