தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ராமராஜ், ராஜராம். இவர்களது தந்தை விருமன் பெயரில் இ.புதுக்கோட்டை அருகே உள்ள முருகமலைகோம்பை, பெரிய வாழட்டி பகுதியில் உள்ள 2 ஏக்கர் 75 சென்ட் நிலத்தில் மா விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது தந்தை பெயரில் உள்ள பட்டா நிலத்தை தங்களுக்குச் சொந்தமானது என்று செந்தில், சின்னையா, தங்கப்பாண்டி ஆகிய மூவர் ஆக்கிரமிப்பு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (ஜன.05) ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பதாகைகளுடன் தரையில் அமர்ந்து ராமராஜ், ராஜராம் சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்குமாறு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தை எப்படியும் அபகரித்து விடலாம் என்று கடந்த 30 ஆண்டுகளாக நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். மேலும் வருவாய்த் துறையினரும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். சகோதரர்களின் இந்த திடீர் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டா நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் - பாதிக்கப்பட்ட விவசாயிகள் தர்ணா இதையும் படிங்க:நான்கு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம்!