மதுரை மாவட்ட ஆவினில் இருந்து கடந்தாண்டு தேனி மாவட்ட ஆவின் தனியாக பிரிக்கப்பட்டது. தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர் உள்பட 9 தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் 502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவினர் 9 பேர், 5 பெண்கள், 3 பட்டியலினத்தவர்கள் என 17 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்படுவர்.
தேனி ஆவின் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-இன் சகோதரரான ஓ.ராஜா நியமிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அவரது நியமனத்தை எதிர்த்து பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஓ.ராஜா உட்பட 17 இயக்குனர்களின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ஜனவரி 30ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தேனி ஆவினின் இடைக்கால தலைவராக ஓ.ராஜா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேனி என்.ஆர்.டி நகரிலுள்ள ஆவின் அலுவலகத்தில் ஓ.ராஜா உட்பட அதிமுகவைச் சேர்ந்த 17பேர் இயக்குநர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனர். அமமுக சார்பில் 3 பேர், சுயைட்சைகள் இருவர் என மொத்தம் 22 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் அமமுகவைச் சேர்ந்த குள்ளப்புரம் வையாபுரி, கரட்டுப்பட்டி மகேஸ்வரி, சுயேட்சையான கருவேல்நாயக்கன்பட்டி அழகேசன் ஆகிய 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாதது, முன்மொழிந்ததில் குளறுபடி, விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பாதது ஆகிய காரணங்களால் இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 19 தொகுதியுள்ள வேட்பாளர் பட்டியலில் இன்று அமமுகவைச் சேர்ந்த செல்வராஜ், சுயேச்சை வேட்பாளர் பெருமாள் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றனர்.
போட்டியின்றி தேனி ஆவின் தலைவராகிறார் ஓ.ராஜா இதனால் தேனி ஆவின் இயக்குநர் பதவிக்கு ஓ.ராஜா தலைமையிலான அதிமுகவினர் 17 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தேர்தல் அலுவலர் நாவரசு வெளியிட்டார். இந்த அறிவிப்பில் இளையராஜா, செல்வராஜ், ஓ.ராஜா, ராஜசேகரன், சரவணன், ராஜலெட்சுமி, செல்லமுத்து, நமசிவாயம், சோலைராஜா கமலம், கார்த்திகா, முத்துலெட்சுமி, சுசிலா, விஜயலட்சுமி,அனிதா, சாமிதாஸ், வசந்தா ஆகிய 17 பேர் தேனி ஆவின் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இயக்குநர்கள் கூடி மார்ச் 9ஆம் தேதியன்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பர். இதனால் தேனி ஆவின் தலைவராக ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார். தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் இது நாள் வரை நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.