தேனி:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார், பழனியம்மாள் நாச்சியார் (95). இவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நலம் முன்னேறியதால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வாறு வீட்டில் ஓய்வில் இருந்த அவர், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது சென்னையில் இருந்த ஓபிஎஸ், தேனிக்குச் சென்று தாயாரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அதிமுக பொதுக்குழு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, நேற்றைய முன்தினம் (பிப்.23) மாலை சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு 9.30 மணியளவில், ஓபிஎஸ் தாயாரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி அவருக்கு வெண்டிலேட்டர் வைத்து, பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் வீட்டுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழனியம்மாள் நாச்சியார் நேற்று (பிப்.24) இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த ஓபிஎஸ், தேனிக்கு சென்று தனது தாயாரின் இறுதி சடங்கு பணிகளில் ஈடுபட்டார்.
அவரது தாயாரின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் அவரது வீட்டில் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த பழனியம்மாள் நாச்சியாரின் கணவர், பெரியகுளம் ஓடக்கார தேவர் ஆவார். இவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள், உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அமுமக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:ஓபிஎஸ்சை நீக்கியதற்கு காரணம் ‘இது’தான்.. ஜெயக்குமார் ஓப்பன் டாக்!