சென்னை:2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து பெற்ற ரவீந்திரநாத் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஓ.பி.ரவீந்திரநாத், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக வாக்காளர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்ற போது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பாக சில விவரங்களை நீதிபதி கோரியிருந்தார்.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே தங்களது தரப்பு ஆவணங்களை சமர்பிக்க முடியும் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென ரவீந்திரநாத் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதி, கடந்த ஜூன் 28ம் தேதி ஓ.பி.ரவீந்திரநாத்திடம் விசாரணை நடத்தினார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (ஜூன் 06) தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற தேர்தல் வெற்றியை செல்லாது என உத்தரவிட்டார். அவருக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்களை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ஓ.பி.ரவீந்திரநாத்(O.P.Ravindranath) தரப்பில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்ததுடன், தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து ரவீந்திரநாத் எம்.பியாக தொடர்வதில் எந்த சிக்கலும் எழவில்லை. சேலம் எடப்பாடி தொகுதியில் வேட்புமனுவில் தவறான தகவல்கள் கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி மீதும் மிலானி தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:செய்தியாளர்களை அவமதித்த நாம் தமிழர் கட்சியினர்; சீமானை புறக்கணித்த செய்தியாளர்கள்!