தேனி:மத்திய உளவுத்துறை (NIA) அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, BSNL இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தி, அதிலிருந்து வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் (Satellite Phone)மூலம் தொடர்பு கொண்டும் பேசிய 2 பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர்.
மத்திய உளவுத்துறை (NIA) அலுவலர்கள் நடத்திய சோதனையில் 2200 சிம் கார்டுகள் மற்றும் 35 சேட்டிலைட் ரிசீவர்கள் (Satellite Receiver Box) கைப்பற்றபட்டன. இதில் சம்பந்தபட்ட மேலும், 3 பேரை மத்திய உளவுத்துறை அலுவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறை அலுவலர்களுக்கு சமீபத்தில் முக்கிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில் BSNL இணைப்பகத்தில் இருந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலமாக தனியார் சேட்டிலைட் போன் உதவியுடன் சிலர் தொலைபேசி இணைப்பகம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக இது குறித்து மத்திய உளவுத்துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் தேனி BSNL இணைப்பகத்தில் இருந்து இந்த குற்றச் சம்பவங்களை நடந்தி வருவதாக தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து சென்னை மற்றும் டெல்லியிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலர்கள் தேனி மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.
இந்நிலையில் ஆண்டிபட்டியில் உள்ள பாப்பாம்மாள்புரம் மற்றும் தேனி காவல் நிலையம் அருகில் பழைய தாலுகா அலுவலகம் பகுதியிலுள்ள வீட்டில் நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, BSNL இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியாக தொலை தொடர்பு இணைப்பகம் நடத்தி வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.