தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கான புதிய குடிநீர் குழாய் இணைப்பிற்கு ரூ. 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஊராட்சியின் இச்செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கு அவர்கள் குடிநீர் குழாய் இணைப்பிற்கு கூடுதல் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்தனர்.