நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி அவர்களது பெற்றோர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தேனி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். தேனி சமதர்மபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன்னிலையில் ஆறு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மாணவர்கள், அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 28, 29 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் நான்கு பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சென்னை சத்யசாய் மருத்துவக்கல்லூரி மாணவி அபிராமி நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரின் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் நான்காம் தேதி மனு அளித்திருந்தார். அக்டோபர் 15ல் தேனி நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன் நடந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயதினகரன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.