நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக மாணவர்கள் மற்றும் அவரது தந்தைகள் உள்பட இதுவரை 8 பேர் தேனி சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆள்மாறாட்டத்தின் முக்கிய நபராகக் கருதப்படும் முகமது ரசீத் என்ற இடைத்தரகரை தேடும் பணியில் சிபிசிஐடி ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒரே பெயரில் நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை கோரி தேசிய தேர்வு முகமையிடம் சிபிசிஐடி விண்ணப்பித்து இருந்தது.
இதன் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை அளித்த தகவலின்படி சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா என்பவரை நேற்று தேனி சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வந்தனர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அர்ஜுன் என்பவரது மகள் ஆவார். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்ட மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி ஆகியோரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இன்று காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, மாணவி பிரியங்கா சிறிது நேரம் கதறி அழுததால் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக சிபிசிஐடி அலுவலகக் கதவு பூட்டப்பட்டு சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய தேர்வு முகமை அளித்த முகாந்திரத்தின் அடிப்படையில், மாணவியிடம் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.