நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி மற்றும் அவர்களது பெற்றோர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தேனி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தேனி சமதர்மபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்பி விஜயகுமார் முன்னிலையில் ஆறு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீன், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகவும், அவர்களது தந்தைகள் சரவணன், டேவிஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் நான்கு பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்ஃபான் என்பவர் மீதும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் தலைமறைவானார்.
மொரீசியஸ் நாட்டிற்கு மாணவர் இர்ஃபான் தப்பி ஓடியதாக எழுந்த தகவலையடுத்து அவரை பிடிப்பதற்கு சிபிசிஐடி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இர்பானை 9ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரைத்தொடர்ந்து இர்ஃபானின் தந்தை முகம்மது சபியிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
முறையாக மருத்துவம் படிக்காமல் வாணியம்பாடியில் மருத்துவமனை நடத்தி வந்தது கண்டறியப்பட்டு அவரரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் புதிய திருப்பமாக மாணவி ஒருவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் அர்ஜூனன் என்பவரது மகள் பிரியங்கா என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்தனர்.
சென்னை சவீதா மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரை செப்டம்பர் 12ஆம் தேதி தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இந்த எட்டு பேரின் வழக்கறிஞர்கள் சார்பில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதன் பின்னர் தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் பிணை கேட்டு மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா முன்னிலையில் நடைபெற்றது. அதில், நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனை பிணையை மேற்கோள் காட்டி குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அதற்கு சிபிசிஐடி காவல்துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், பிரியங்கா மற்றும் அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ், முகம்மது சபி, மைனாவதி உள்ளிட்ட எட்டு பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதனைத்தொடர்ந்து, எட்டு பேருக்கும் மீண்டும் பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யவுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.