நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில் மேலும் நான்கு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் இவர்களது தந்தை சரவணன், டேவிஸ், மாணவி அபிராமி அவரது தந்தை ஆகியோரை விசாரணைக்காக தேனியில் உள்ள அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச்சென்றனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: இருவருக்கு நீதிமன்ற காவல்!
தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் பிரவின், அவரது தந்தை சரவணன் ஆகியோரை 15 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர் பிரவின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக சான்றளித்ததைத்தொடர்ந்து நேற்று இரவு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், மாணவர் பிரவின் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தகுந்த பாதுகாப்புடன் சிபிசிஐடி காவல் துறையினரால் தேனி மாவட்ட சிறைக்கு அவர்கள் மாற்றப்பட்டனர்.