நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக தேனி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் உள்ள பாலாஜி, எஸ்.ஆர்.எம். ஆகிய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் உதித்சூர்யா, இர்பான், பிரவீன், ராகுல், மற்றும் அவர்களின் பெற்றோர் வெங்கடேஷ், சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில், இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிற்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக மாணவி ஒருவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமை அளித்த தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அர்ஜூனன் என்பவரது மகள் பிரியங்கா என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரை செப்டம்பர் 12ஆம் தேதி தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை செய்து அன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றமும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி இந்நிலையில், பிரியங்கா அவரது தாய் மைனாவதி ஆகியோரது நீதிமன்றக் காவல் முடிந்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், இருவருக்கும் மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து நவம்பர் 8ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து, பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகிய இருவரையும் காவல் துறையினர் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை: மனதை உலுக்கும் அழுகுரல்... மீட்கும் பணி தீவிரம்...!