தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதவிய இடைத்தரகர் கைது!

By

Published : Dec 8, 2019, 8:08 AM IST

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பான வழக்கில் தேடப்பட்டுவந்த இடைத்தரகரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Neet impersonation
Neet impersonation

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சிபிசிஐடி காவல்துறை அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நான்கு மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் என மொத்தம் 10 பேரை தேனி சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மாணவியின் தாய் தவிர மற்ற ஒன்பது பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவர்கள் அனைவரும் சென்னையில் செயல்பட்டு வந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்தவர்கள் என்பதும், அவர்கள் ஒரே இடைத்தரகர் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், மாணவர்கள் அளித்த தகவலின்படி முக்கிய குற்றவாளியான இடைத்தரகரை காவல் துறையினர் தேடிவந்தனர். தருமபுரியைச் சேர்ந்த எல்ஐசி ஏஜெண்ட் முருகன் என்பவர்தான் இந்த இடைத்தரகர் வேலையையும் செய்துவந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முருகனை சிபிசிஐடி காவலர்கள் நேற்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இடைத்தரகர் கைது

தேனி சமத்துவபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் முருகனிடம் இரண்டு நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், மாணவி பிரியங்கா மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு இடைத்தரகராக முருகன் செயல்பட்டது உறுதியானது. மேலும், நீட் ஆள்மாறாட்டத்தில் முக்கிய இடைத்தரகராகச் செயல்பட்ட கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்பவரிடம் நேரடி தொடர்பில் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இவரை நாளை ஆஜர்படுத்தவுள்ளனர். முன்னதாக உடற்தகுதி சான்றிதழ் பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு முருகனை அழைத்து வந்தனர். இந்த விசாரணைக்கு பின்பு முக்கிய இடைத்தரகர் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இஸ்லாமியர் பெயரில் கோயில்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் - காவல் ஆணையரிடம் புகார்

ABOUT THE AUTHOR

...view details