நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியருந்தது. இது குறித்தான வழக்கை தற்போது சிபிசிஐடி காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தேனி மருத்தவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனை விசாரணைக்காக அழைத்துவந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக நீட் கலந்தாய்வு முடிந்து, தேனி மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் போடவந்தது உதித் சூர்யாதானா? இல்லை அவருக்கு பதில் தேர்வு எழுதியவரா ? என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
அதற்கு, கல்லூரிக்கு வந்து அட்மிஷன் போடவந்தது போலியான நபர்தான் என்று பதிலளித்துள்ளார். இந்த விஷயத்தை இவர் முன்னதாக ஊடகங்களிலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கல்லூரி சேர்க்கை நடைபெற்ற நேரத்தில் கொடுக்கப்பட்ட பயோடேட்டாவில் உதித் சூர்யாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும் ஆவணம் வெளியாகியுள்ளது.