நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யாவை தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர் இன்று கைதுசெய்தனர். தலைமறைவாக இருந்த மாணவர் உதித் சூர்யாவை அவரது பெற்றோருடன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கைது செய்த காவல் துறையினர், இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக தற்போது தேனிக்கு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் அழைத்து வரப்படுகின்றனர்.
இதனிடையே தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு துணை கண்காணிப்பாளர் ஹாட்வின் ஜெகதீஷ்குமார் வருகை தந்துள்ளார். இதுவரை இந்த வழக்கின் தொடக்கத்தில் விசாரித்து வந்த சிறப்பு தனிப்படை ஆய்வாளர் உஷாராணி அவரை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தார். பின்னர் நீண்ட நேரம் வழக்கு குறித்த தகவல்கள் ஆராயப்பட்டன.