தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 24, 2020, 1:52 PM IST

ETV Bharat / state

நாயக்கர் கால சதிகல், நடுகல்... கடவுளாக வழிபட்ட மக்களுக்கு ஷாக்

தேனி: தங்கம்மாள்புரம் கிராமத்தினர் பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வந்த கற்சிலைகள், நாயக்கர் கால சதிகல், நடுகல் என போடிநாயக்கனூர் கல்லூரியைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

குதிரை வீரன் நடு கல்
குதிரை வீரன் நடு கல்

தேனி மாவட்டம் வருசநாடு அருகே அமைந்துள்ளது தங்கம்மாள்புரம் கிராமம். கடந்த 1984ஆம் ஆண்டு மூல வைகையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இழுத்து வரப்பட்ட இரண்டு கற்சிலைகளை மதுரைவீரன் - பொம்மியம்மாள், கன்னிமார் தெய்வங்களாக வைத்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்று பேராசிரியர் மாணிக்கராஜ் தலைமையிலான குழுவினர், இந்த கற்சிலைகளை ஆய்வு செய்ததில், இவை கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேராசிரியர் கூறுகையில், இன்றைய தேனி மாவட்டம் பிற்கால பாண்டியர்கள் காலத்தில், அளநாட்டுப் பகுதிகளாக இருந்து வந்தபோது, ஆண்டிபட்டியில் இருந்து வருசநாடு வரை "வருசைநாடு" என்றழைக்கப்பட்டது. அக்காலத்தில் தங்கம்மாள்புரம் கிராமம் அடர்ந்த மூங்கில் காடுகளாக இருந்ததால் மூங்கிலாறு என அழைக்கப்பட்டது. கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கற்சிலைகளானது நாயக்கர் கால வழக்கில் இருந்த உடன்கட்டை ஏறுதலை குறிக்கும் சதிகல், வீரமரணம் அடைந்தவனின் நினைவாக வைக்கப்படும் நடுகல் ஆகும்" என்றார்.

ஆண்டிபட்டி அருகே நாயக்கர் காலத்து சதி கல் மற்றும் குதிரை வீரன் நடு கல் கண்டுபிடிப்பு

தொடர்ந்து பேசிய அவர், "நடுகல்லில் வீரன் ஒருவன் வாளை உயர்த்தியபடி குதிரையில் அமர்ந்து போருக்குச் செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குதிரையின் மீது அமர்ந்திருப்பவன் படைத்தளபதியாகவோ அல்லது குறு நில மன்னராகவோ இருக்கலாம். போரில் வீரமரணம் அடைந்த இவரை, படை வீரர்கள் சொர்க்க லோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை குறிக்கும் வகையில் இந்தச் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சதி கல்லில், கணவருடன் சேர்ந்து உடன்கட்டை ஏறுவதை குறிக்கும் வகையில், வீரன் ஒருவன் தனது இரு மனைவிகளுடன் பீடத்தில் சுகவாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டள்ளது. இந்த இரண்டு சிற்பங்களில் இருப்பவர்களின் தோற்றம், அலங்காரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், இவை நாயக்கர் காலத்தை சேர்ந்தவைகளாக இருக்கக்கூடும்" என்றார். மேலும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்படும் பண்டைய கால சின்னங்களை முறையாக பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: '9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details