கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.
கேரளாவில் வலுவடைந்த தென்மேற்குப் பருவமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் டாடா தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலச்சரிவில் சிக்கின. இந்த கோர விபத்தில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
மூணாறு நிலச்சரிவின் புகைப்படங்கள் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் பெட்டிமுடி பகுதியில் நிலவும் மோசமான வானிலையால் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக 12 பேர் பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு, டாடா மருத்துவமனை, கோலஞ்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐந்து நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணியில் நேற்று வரை (ஆக.11) 52 பேர் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 18 பேரின் உடல்கள் தேடப்பட்டு வருவதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
மூணாறு நிலச்சரிவின் புகைப்படங்கள் இந்நிலையில், மீட்புப் பணியின் ஆறாவது நாளான இன்று இரண்டு சிறுமிகள் உள்பட மூன்று பெண்கள் சடலங்களாக கைப்பற்றப்பட்டன. இவர்கள் பெட்டிமுடி நேமக்காடு எஸ்டேட் பகுதியில் வசித்து வந்தவர்கள் எனத் தெரியவந்தது.
தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர், வனத்துறை, காவல் துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கைப்பற்றப்பட்ட சடலங்கள் அனைத்தும் கரோனா விதிமுறைப்படி உடற்கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டன.
மேலும், நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த மீதம் உள்ளவர்களை தேடும் பணி நாளையும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.