ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட பயணியர் தங்கும் விடுதி தேனி:சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி பயணியர் தங்கும் விடுதி தற்போது குப்பைகள் குவிக்கும் இடமாகவும், நகராட்சி குப்பை லாரிகள் மற்றும் குப்பை வண்டிகள் நிறுத்தப்படும் இடமாகவும் மாறி வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடைக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் 1வது தெருவில் அமைந்துள்ளது, நகராட்சி பயணியர் தங்கும் விடுதி. கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பயணியர் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், இந்த விடுதி நகராட்சி நிர்வாகத்தினரால் குப்பை லாரிகளும், குப்பை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாக மாறி உள்ளது. மேலும் தங்கும் விடுதியின் உள்ளேயும், விடுதியைச் சுற்றிலும், விடுதியின் கார் நிறுத்தத்திலும் குப்பைகள் சூழ்ந்துள்ளதோடு, விடுதி முழுக்க குப்பை வண்டிகளால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: குறைந்தபட்சம் ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் - சிபிஐஎம் பாலகிருஷ்ணன் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
மேலும் பயணியர் தங்கும் விடுதி எதிர்புறமும் குப்பைகள் மொத்தமாக கொட்டப்படும் இடமாகவும் மாறி உள்ளது. நகராட்சி குப்பை வண்டிகளில் கொண்டு வரப்படும் குப்பைகளும் இங்குதான் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் விடுதியின் அறைகள் பூட்டப்படாமலும், முறையான பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதால், மதுபானக் கூடமாக மாறி உள்ளது.
விடுதியைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவைகள் செயல்படுகிறதா என்ற சந்தேகம் இப்பகுதி பொதுமக்கள் இடையே இருந்து வருகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகள் காரணமாக, இப்பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால், அருகில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபயாம் இருந்து வருகிறது.
மேலும், இப்பகுதி குடியிருப்பு வாசிகள் பகலிலேயே புகைமூட்டம் போட்டு, கொசுக்களை விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சியால் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பயணியர் தங்கும் விடுதி, இப்படி யாருக்கும் பயனற்ற நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி வருவது குறித்து இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை கத்திப்பாரா போன்று திருச்சியிலும் சாலை அமைக்கப்படும் - மேயர் அன்பழகன் தகவல்!